எங்கள் வீடு!

எத்தனை நாள்
ஏங்கியிருப்போம்
சொந்த வீடு வேண்டுமென?

அத்தனையும்
நனவானது
ஒரு வீடு நாம்
கட்டிய போது!

ஒவ்வொரு
செங்கல்லும்
சொல்லியது இது
நம் வீடு என!

ஒவ்வொரு
அறையாக
எழுந்த போது
சிறு வயதில்
நாம் வீடு கட்டி
விளையாடியது
நினைவில்
எழுகிறது!

எவ்வளவு ஆரவாரத்துடன்
ரசித்து விளையாடினோம்
அதைப் போலவே
ரசித்து ரசித்து
கட்டினோம்
புது வீட்டை!

அந்நாட்களில்
நெஞ்சினில்
நிறைந்திருந்த
மகிழ்ச்சியை
இவ்வீடு
எப்போதும்
கொண்டிருக்குமென
மனக்கோட்டைக்
கட்டினோம்!

யார் கண் பட்டதோ
தெரியவில்லை!

ஓங்கி வளர்ந்த
மரத்தின்
ஒவ்வொரு கிளைகளாய்
வெட்டி வீழ்த்தியதை போல்
ஒவ்வொரு உறவாக
ஏதேதோ காரணங்களுக்காக
பிரிந்து கொண்டே
இருக்கிறது!

மாலையில் உறையும்
கூடுகளைப் போல்
இருந்திருக்க வேண்டிய
அவ்வீடு
கண்டஞ்சும்
சிறைக் கூண்டுகளாய்
மாறிய கோலமென்ன?

ஒரு நாளில் அதை
விற்று காசாக்கி
சொத்தைப் பிரிக்கும்
நிலை வந்த போது
சிறு வயதில்
கட்டிய வீட்டை
இடித்த போது
கனத்த இதயத்தைப் போல,
உயிர் என்னை
பிரிந்த
கணத்தை
உணர்ந்ததைப் போல
துக்கம் தொண்டையை
அடைத்தது!

மாற்றம் நிறைந்த
உலகில்
மாறாதது
மனித உறவென
நம்பி
ஏமாந்தோம்!

எங்கள் வீட்டை
விற்றபின்
வீட்டைக் காலி
செய்யும்
தருணம்!

உயிரற்றப் பிணங்களாய்,
சடப்பொருளாய்
நாங்கள்!
எங்கள் மனசாட்சியின்
மரணத்திற்காய்
மவுனமாய் துக்கம்
அனுசரித்தது
எங்கள் வீடு!

கடைசியோ கடைசியாய்
ஒருமுறை
வீட்டை வலம் வந்தேன்!
வாஸ்து பார்த்து
வடக்கு வாசல்
வைத்திருந்தோம்!

தோஷம் பிடித்தது
வீட்டிற்கல்ல
எங்களுக்கு தான்!
சந்தோசம் பறிபோனது!

ஒரு மாதம் கழித்து
அந்த பக்கமாய்
வந்த பொழுது
அவ்வீடு இடிக்கப்பட்டிருந்தது
புதிதாய் கட்டுவதற்காக!

சாலை விபத்தில்
இறந்தவனைக்
கூட்டத்தோடு கூட்டமாய்
யாரோவென
பார்த்து விட்டு
செல்வதைப் போல்
போக எனக்கு
முடியவில்லை!

துக்கம் தொண்டையை
அடைத்தது
ஓவென கதறி
அழத் தொடங்கினேன்!

Comments

Popular posts from this blog

எந்திரன் - ஓர் திருப்புமுனை!

ஆக்கப் பூர்வ தீர்வு!